Pages

Thursday, February 24, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை

புதிர் விளையாட்டின் இளவரசிக்கு
மனுஷ்ய புத்திரன்

புதிர் விளையாட்டின்
கலைந்த உருவங்களைச் சேர்ப்பதில்
அம்மு ஒரு நிபுணியாகிவிட்டாள்

அவளைக் குழப்பும்
எனது எல்லா முயற்சிகளையும்
அவள் வெற்றிகரமாகக் கையாள்கிறாள்

ஒரு முறை கூட அவள்
சிங்கத்தின் தலையில்
ஒரு மாட்டின் தலையைப் பொருத்துவதில்லை

குதிரையின் கால்களுக்குப் பதில்
வாத்தின் கால்களை
மாற்றி வைத்ததில்லை

தச்சனின உபகரணங்களில்
அவள் தையல் ஊசியை
சேர்ப்பதில்லை

ஒப்பனை செய்யும்
பெண்ணின் கையில்
அவள் சுத்தியலைக் கொடுப்பதில்லை

தும்பிகளின் விலாக்களில்
அவள் பருந்தின் சிறகுகளை நுழைப்பதில்லை

மீனின் கண்களின் இடத்தில்
கழுகின் கண்களை மாற்றியதேயில்லை

அம்மு அவள் பூர்த்தி செய்யவேண்டிய
புதிர் விளையாட்டின் சிறு பகுதி
காணாமல் போகும்போது
அமைதியிழந்து விடுகிறாள்
அவளது மொத்த உலகின்
சிதைக்கப்பட்ட ஒரு பகுதிபோல
அது அவளது ஆறாத காயமாகிறது
அது தனது வெற்றிகளுக்கு
எதிரான நெறியற்ற சதி என்பதை
அவள் சீக்கிரமே கண்டுபிடித்து விடுகிறாள்

நான் எனது
எல்லா புதிர்விளையாட்டுகளிலும்
ஒரு புலியின் உடலில்
ஒரு ஆட்டின் தலையாக இருந்தேன்
அல்லது ஒரு மீனின் உடலில்
பாம்பின் வாலாக அசைந்தேன்

எப்போதும் என் விதியின் வரைபடத்தில்
காணாமல் போகும் பகுதிகளை
நான் தேடியதே இல்லை
இதுதான் முழுமை என்று
எப்போதும் பிடிவாதமாக நம்பவைத்தேன்

எல்லாவற்றையும் விட
கலைக்கப்பட்ட எதையும்
உரிய இடத்தில் வைக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும்
நான் அதை
இன்னும் கொஞ்சம் சீர்குலைக்கிறேன்
அதில்
இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்துகிறேன்

No comments:

Post a Comment