இந்திய ராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனிமனித பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழ தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவருடைய தியாகம் உன்னத வடிவம் அடைகிறது’’
-1988-ம் ஆண்டு இந்திய அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டார் ஈழத்தாய் அன்னை பூபதி. அவருக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் உரை 23 வருடங்கள் கழித்து அவருடைய அன்னையாரான பார்வதி அம்மையாருக்கே பொருந்திப் போவது காலத்தின் கண்களிலும் கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிறது.
‘‘துரை... எங்கப்பா இருக்கே? உன்னைத்தேடி வாசல்ல சிங்களக் காடையர்கள் வந்து நிக்கிறாங்கள்..?’’ ஓர் அதிகாலையில் பார்வதியம்மா குரல் கொடுத்தபோது, வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிலிருந்து தப்பியோடினார் பதினைந்து வயது சிறுவன் பிரபாகரன். அப்போது முதல் தாய்மண்ணுக்கான போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துவிட்ட பிரபாகரனால், இன்று தன்னுடைய தாயின் கடைசி முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை.
‘இனி பிரபாகரனை ‘துரை...’ என வாஞ்சையோடு கூப்பிட அவருடைய அன்னை இல்லை’ என்று கறுப்புக்கொடி கட்டி கலங்கிக் கொண்டிருக்கிறது வல்வெட்டித்துறை.
பத்து வருடங்கள் முன்பு வலது பாகம் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மா, இந்தியாவுக்கு வந்து திருச்சி அருகே உள்ள முசிறியில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது முசிறியிலிருந்து திருச்சி செல்வதாக இருந்தால்கூட கே.கே.நகர் டி.எஸ்.பி.யிடம் சொல்லிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது உட்பட பல கடும் கட்டுப்பாடுகளில்தான் சிகிச்சை எடுத்தார் பார்வதி. ஒருவேளை, சிகிச்சை பெறும் பார்வதி அம்மாவை பார்க்க அவருடைய மகன் பிரபாகரன் வரக்கூடும் என்று சந்தேகப்பட்டு மருத்துவமனை வாசலிலேயே எப்போதும் போலீஸை நிறுத்தியிருந்தது அன்றைய அரசு.
அதன்பின் இலங்கை சென்றுவிட்ட பார்வதி அம்மா... சில வருடங்களுக்கு முன் சிகிச்சைக்காக மலேசியா சென்றார். அங்கிருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாவை... தமிழ்நாட்டில் காலடிகள் படவிடாமல் அதே விமானத்திலேயே மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது இன்றைய தி.மு.க. அரசு.
அதன்பின், மலேசியாவில் இருந்து பார்வதி அம்மா எழுதுவதுபோல் தமிழக முதல்வருக்கு கடிதமும் வந்தது. அதில் சென்னையில் சிகிச்சை பெற கலைஞரிடம் பார்வதி அம்மையார் கெஞ்சுவதுபோல எழுதப்பட்டு, முடிவில் நன்றியுடன் உங்கள் உடன்பிறப்பு என எழுதி, பார்வதி அம்மாவின் கைரேகையும் வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தை அடுத்து, ‘மருத்துவமனையை விட்டு வெளியே வரக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது, எந்த அரசியல் நண்பர்களையும் பார்க்கக் கூடாது’ என்று கடும் நிபந்தனைகளுடன் பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க கலைஞர் முன்வந்தும்... இப்படியொரு ‘சிறை’ சிகிச்சை தேவையில்லை’ என்று கருதி மறுத்துவிட்டார் பார்வதி அம்மையார்.
இந்த கடிதம் பற்றி அன்றே சர்ச்சையைக் கிளப்பிய வைகோ, தி.நகர் முத்துரங்கன் சாலை பொதுக்-கூட்டத்தில்... ‘‘நினைவு இல்லாமல் படுத்திருக்கும் பார்வதி அம்மையாரின் கைரேகையைப் பெற்று இதுபோன்ற ஒரு கடிதத்தை அவருக்குத் தெரியாமலேயே இவர்களாகவே எழுதியுள்ளனர். நான் கேட்கிறேன் கருணாநிதி அவர்களே... உங்களின் உடன்பிறப்பு என சொல்லிக் கொள்வதற்கு பார்வதி அம்மா என்ன தியாகராய நகர் தி.மு.க.வின் வட்டச் செயலாளரா?’’ என்று கேட்டார் ‘‘பாகிஸ்தானிய சிறுவனுக்கு கூட இதய மாற்று சிகிச்சை கொடுக்கும் சென்னையில்... தமிழச்சியான பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டீர்கள். என்ன காந்தி தேசம் அது?’’ என்று இப்போதும் கேட்கிறார்கள் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள்.
பார்வதி அம்மையாரின் இறப்பு செய்தியை அறிவிக்கும்போது எந்த வகையிலும் பிரபாகரனின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று... எழவு வீட்டுக்கே சென்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறது சிங்கள ராணுவம். இதைவிடக் கொடுமையாக... இறந்தபிறகு வாரிசுகளால் செய்யப்படும் ஈமச் சடங்குகள் செய்யக்கூட பார்வதி அம்மையாரின் வாரிசுகளை இலங்கைக்கு அனுமதிக்க மறுத்து வருகிறதாம் சிங்கள அரசு. இதனால் கனடாவில் உள்ள பார்வதி அம்மையாரின் மகள்களும், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனும்கூட வல்வெட்டித்துறைக்கு வந்து அஞ்சலி செலுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்திலிருந்து பார்வதி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை... கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியிருக்கிறது சிங்கள அரசு. மகன் தாய் நாட்டுக்காக போராடுகிற ஒரே காரணத்-துக்காக, அஞ்சலியில்கூட வன்மம் காட்டிய ராஜபக்ஷே... ஈழ தேசத்தின் தாய் இறந்த அன்றுதான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.
பிரபாகரன் என்னும் வீரன் தவழ்ந்து விளையாடிய அந்த மடி, வல்வெட்டித்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டிருக்கிறது. அந்த சாம்பலில் இருந்து மீண்டும் விடுதலைப்பூக்கள் மலராதா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்!
நன்றி: தமிழக அரசியல்
No comments:
Post a Comment